22.12.2024
கிராமங்களில் கீற்று கொட்டகை போட்டு திவ்ய நாமம் நிகழ்ந்த காலங்கள்
ராதா கல்யாண , சீதா கல்யாண உற்சவங்களின் பாரம்பரியம் மிக்க வரலாறு
-----
விளங்குடி வெங்கட ரமணனை பரிவுடன் ஸ்மரித்தால் "என்ற அருமையான
கீர்த்தனையை பாடி வந்தால் நமக்கு மனசாந்தியும் நம் வாழ்வில்
எல்லா சௌபாக்கியங்களும் ஏற்படும்.
கபித்தவனம் என்னும் விளங்குடி கிராமம் கும்பகோணம் அருகில் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது .இந்த கிராமத்திற்கு 100 வருடங்களுக்கு மேலாக கிருஷ்ண பகவானுக்கு ராதா கல்யாண உற்சவம் நடந்து வருகிற பெருமை இருக்கிறது.
அந்த வகையில் இந்த வருடம் டிசம்பர் 28ஆம் தேதி 126 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
இந்த தருணத்தில் நாம சங்கீர்த்தனத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவரும் இந்த உற்சவத்தை பல வருடங்களாக சிறப்பாக நடத்திட தொண்டு செய்பவருமான விளங்குடி K. வேணுகோபாலன் அவர்கள் தன்னுடைய நீண்ட கால அனுபவங்களை எழுத்தாளரும் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் மூத்த ஆசிரியரமான வி பாலசுப்பிரமணியன் அவர்களுடன் பகிர்கிறார் .
பாலு:வேணு அவர்களே நாம சங்கீர்த்தனத்தில் உங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாடு மற்றும் விளங்குடியில் ராதா கல்யாணம் நடத்திய உங்களுடைய நீண்ட கால அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வேணு: எனக்குத் தெரிந்த வகையில் என்னுடைய 15 வது வயதில் ராதா கல்யாணத்திற்கு பெருமாள் கோவிலில் கூட்டம் போட்டு எங்கள் அப்பா கல்யாண சுந்தர பாகவதர் அவர்களுக்கு சௌரியமான தேதியில் ராதா கல்யாணம் வைப்பார்கள். ஏனெனில் மார்கழி மாதம் எங்கள் அப்பா முக்கிய சில ஊர்களுக்கு பஜனைக்கு தேதி கொடுத்திருக்க வேண்டி இருக்கும். அப்பொழுது ,ராதா கல்யாணத்திற்கு பத்து நாள் முன்னதாகவே கோயிலில் திவ்ய நாமம் நடத்திட புதிதாக கீற்று கொட்டகை போட வேண்டும்.
அப்போதெல்லாம் எனக்கும் எனது அண்ணா கே சுப்பிரமணியன் அவர்களுக்கும் ராதா கல்யாண ஏற்பாடுகள் செய்திட அனுபவம் இல்லை. பள்ளிக்கூடம் செல்வது, பாடங்கள் படிப்பது போன்றவற்றுக்கு நேரம் சரியாகி விடும். அப்போது எனக்கு தெரிந்தவரை 100 போஸ்ட் கார்டுகள் வாங்கி தான் ராதா கல்யாணத்தைப் பற்றி எழுதி எல்லோருக்கும் அனுப்புவார்கள்.
ஆனால், கூட்டம் 150 -200 பேர்கள் வரை இருக்கும் .மொத்த செலவு சுமார் 3000 ரூபாய் வரை தான் இருக்கும். யாராவது ஒருவர் வீட்டில் சமாராதனை உபயம் இருக்கும். எனக்கு 22 வயதில் நம்மூர் பட்டா மணியார் ( சேது மாமா) என்னை கூப்பிட்டு ராதா கல்யாண வரவு செலவு எழுத சொன்னார் .அதன் பிறகு என்னையே யாவும் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டார் சேது மாமா.
பாலு: அப்பொழுதெல்லாம் உங்களுக்கு பஜனை மேல் ஈடுபாடு உண்டா? உங்க அப்பா கல்யாணசுந்தர பாகவதர் என்ன சொல்லுவார்?
வேணூ:அப்பொழுது நம்ம ஊர் ,மறைந்த விசு மாமாவுக்கு பஜனை கற்றுக்கொள்ள வேண்டும் என என் அப்பாவிடம் கேட்டார். அவரும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.கொஞ்ச நாள், நம்மூர் பலராம தீஷிதர் பெண் சாந்தாவும் கற்றுக் கொள்ள வருவாள்.
நான் அதில் அதிக கவனம் செலுத்தாவிட்டாலும் என் அப்பா வேணுவுக்கு சொல்லிக் கொடுத்தால் உடனே சுருதியுடன் தாளத்துடன் பாட வருகிறது என எங்க அம்மாவிடம் சொல்வார். அதுதான் என் அப்பாவிடம் நான் பெற்ற பெரிய ஆசீர்வாதமாக கருதினேன்.
அதற்கு பிறகு எங்களுடைய அப்பா கல்யாணசுந்தர பாகவதர் அவருடைய தள்ளாத வயதில் இருந்தபோது நான் கோயிலில் ஜெயகோவிந்தா ஜெய கோவிந்தா போன்ற நாமாவளிகளை உற்சாகமாக பாடினேன் .
.அதை கேட்டுவிட்டு எங்கள் அப்பா வீட்டிற்கு வந்த போது வேணு நன்றாக நாமாவளி பாடினான் என்று எங்கள் அம்மாவிடம் சொன்னது என் காதுக்கு இனிமையாக இருந்தது. எங்கள் அப்பாவுடைய பெரிய ஆசி கிடைத்ததாகவும் பெருமைப்பட்டேன்.
பாலு: வேணு அவர்களே உங்கள் சிறுவயதில் உங்கள் அப்பாவின் பஜனை நிகழ்ச்சிகளை பார்த்தது போல் அவர் காலத்தில் நம்மூரில் வாழ்ந்த மற்ற பாகவதர்களை பற்றி நினைவு கூறுவீர்களா?
வேணூ:நான் சின்ன பையனாக இருக்கும்போது என் அப்பாவுடன் விளங்குடியைச் சார்ந்த எங்க வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்த ஸ்ரீ ராமநாத பாகவதர் ( அக்னி சார் என்கிற ராஜாமணி அவர்களின் அப்பா) மற்றும் விகடன் சந்தானம் அப்பா சிவராமகிருஷ்ண பாகவதர் ஆகியோர்கள் நம்மூர் கோயிலில் பஜனை செய்வதை பார்த்தது எனக்கு மறக்க முடியாது.
மேலும் ராமநாத பாகவதர் பஜனையில் மிருதங்கம் வாசிப்பதுடன் ஹாஸ்யமாக அபிநய வசனங்களும் பேசுவார். அவருடைய பேரன் ஆர் ஸ்ரீதரன் தற்போது விளங்குடி ராதா கல்யாணம் என்ற YouTube ல் நிறைய பஜனை நிகழ்ச்சிகளை பதிவேற்றம் செய்து வருகிறார்.
ஒர் இரவில் உருவான "வெங்கட ரமணனை பரிவுடன் ஸ்மரித்தால் "என்ற
அருமையான கீர்த்தனை
பாலு: நம்ம ஊர் ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கண்கண்ட தெய்வம் என்பது எல்லோருக்கும் தெரியும் . வருடா வருடம் ராதா கல்யாணம் வைபவத்தில் அவர் மேல் பாடப்பட்ட பிரத்தியேக கீர்த்தனையை பாடி வருகிறோம். அந்த கீர்த்தனை உருவான சுவையான வரலாறை சொல்லுங்களேன்.
வேணு: ஆமாம் பாலு. ஆர்.பி. அய்யர் என்கிற ஸ்ரீ ஆர். பாலசுப்ரமணிய அய்யர் என்னுடைய அப்பா கல்யாணசுந்தர பாகவதருக்கு மூத்த சகோதரர். ஆர்.பி. அய்யர் அனந்தபூரில் ( ஆந்திர மாநிலம்) உள்ள கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தார். அப்போது அனத்தபூரில் ஒர் இரவில் விளங்குடி ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி மேல் கீர்த்தனை எழுதினார். இது அவருடைய சொந்த சாகித்யம்.
" விளங்குடி வெங்கட ரமணனை பரிவுடன் ஸ்மரித்தால் "என்ற அந்த அருமையான கீர்த்தனையை நாம் ராதா கல்யாணம் , பஜனை மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடக்கும் போது பாடி வருகிறோம். இதை பாடி வந்தால் நமக்கு மனசாந்தியும் நம் வாழ்வில் எல்லா சௌபாக்கியங்களும் ஏற்படும்.
( please
refer below the interview photo copy of the full song )
பாலு :ராதா கல்யாணம் நடத்துவதற்கு ஊர் மக்களின் பங்களிப்பை நினைவு கூறுவீர்களா?
வேணு:அப்போதெல்லாம்,ராதா கல்யாண செலவுக்கு ஒரு மாவுக்கு கால் ரூபாய் விதம் ஊரில் பிராமண பட்டாதாரர்களிடம் வசூல் செய்துதான் ராதா கல்யாணம் நடக்கும்.
பிறகு எங்கள் அப்பா வெளியூரில் நம் ஊரைச் சார்ந்தவர்கள், வேலையில் உள்ளவர்கள் மாதம் ஒரு ரூபாய் விதம் வருஷத்துக்கு 12 ரூபாய் அனுப்பும்படி கூறி அப்படியும் நடந்தது.
இந்த சமயங்களில் என் மூத்த அண்ணா K. சீனிவாசன் ஒரு வாரம் முன்பாக ராதா கல்யாணத்திற்கு ஹைதராபாத்தில் இருந்து வந்து நிறைய பணம் வசூல் செய்து வருவார் . இப்படி இருக்கும் போது என் 27 வயதில் எங்கள் அப்பா காலமாகிவிட்டார். அப்போதும் கூட எனக்கு பஜனையில் நாட்டம் போனதில்லை. பாகவதர்களுக்கு ஏற்பாடு செய்வது மற்றூம் எல்லா ஏற்பாடுகளையும் மிக சிக்கனமாக செய்வது என் பழக்கம்.
இப்படியாக வருஷா வருஷம் மேன் மேலும் வெகு விமரிசையாக ராதா கல்யாணம் நம்மூரில் நடந்து வருகிறது.
பாலு :வேணு அவர்களே உங்களுடைய மற்றொரு அண்ணா கே. சுப்பிரமணியன் அவர்களுக்கு பஜனை மேல் இருந்த ஈடுபாடு மற்றும் நம்ம ஊர் பெரியோர்களுடன் பழகிய. உங்கள் அனுபவங்களையும் ஒவ்வொரு வருடமும் ராதா கல்யாணம் நடப்பதற்கு அவர்களுடைய பங்களிப்பையும் நினைவு கூற முடியுமா?
வேணு:என்னுடைய அண்ணா. கே சுப்பிரமணியன் அவர்களுக்கு பஜனை மேல் உள்ள ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகமாயிற்று. மேலும் அவர் டாக்டர் உடையாளுர் கல்யாணராமன் பாகவதர் உடன் பஜனை நிகழ்ச்சிகளுக்கு போவதிலும் ஈடுபட்டிருந்தார்.
இப்படியாக நம்மூர் வாசிகள் வெகு ஆர்வத்துடன் நிறைய நிதி வழங்கி நாளுக்கு நாள் பிரதி வருஷமும் ஒவ்வொரு விதமான வசதிகளை கோயிலில் செய்து வருகிறோம்.
நம்ம ஊர் மறைந்த பி சீனிவாசன் மாமா கொஞ்ச நாள் சின்னாத்தில் அதாவது கிருஷ்ணமூர்த்தி என்கிற வேம்பு மாமாவத்தில் தங்கி சிவன் கோயிலை புதுப்பித்து சாதனை படைத்தார்.
நம்மூரில் எனக்குத் தெரிந்தவரை பெரியாத்து மாமா விஸ்வநாத ஐயர் சின்னாத்து மாமா கிருஷ்ணமூர்த்தி ஐயர் ( வேம்பு மாமா), வெங்கட்ராம ஐயர் ,பட்டா மணியார், சேதுராம ஐயர் ,ராஜம் குழுக்கள் ,ரகுநாத சார், கணக்குப்பிள்ளை வெங்கட்
ராமன் ,பஞ்சாமி மாமா என்கிற பஞ்சாபகேச ஐயர் ,வைத்தா சார் என்கிற வைத்தியநாதன் ஐயர், ராஜாமணி மாமா,பலராம தீக்ஷகர் , பெருமாள் கோவில் சீனிவாச பட்டாச்சார்
மற்றும் விகடம் சந்தானம் மாமா இவர்களுடன் நிறைய பேசி பழகி உள்ளது என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
பாலு :வேணு அவர்களே நாம சங்கீர்த்தனத்தில் உங்களுக்கு ஈடுபாடு எப்பொழுது அதிகரித்தது?
வேணு:எனக்கு பஜனை மற்றும் பக்தி பாடல்களை பாடுவதில் நாட்டம் மற்றும் ஆர்வம் வந்தது எப்போது என்று சொன்னால் உடையாளூர் டாக்டர்
கல்யாணராமன் அவர்களுடைய கேசட்டுகளை கேட்டு கேட்டு தான் என்று சொல்ல வேண்டும்.
பாலு :உங்களுக்கு தெரிந்த வகையில் சீதா கல்யாணம் மற்றும் ராதா கல்யாணம் நம் விளங்குடி கிராமத்தை தவிர மற்ற எந்த ஊர்களில் தொடர்ச்சியாக பல வருடங்கள் நடக்கின்றன என்று சொல்ல முடியுமா?
வேணு :என்னிடம் கேட்டால் சீதா கல்யாணம் ராதா கல்யாணம் நடக்காத ஊர்கள் தான் இப்பொழுது குறைவு. எனவே நம்ம ஊருக்கு பக்கத்தில் அம்மங்குடி, மல்லபுரம் ,சேதினிபுரம், விக்கிரவாண்டி, புளியஞ்சேரி ஆகிய ஊர்களில் சீதா கல்யாணம் நடக்கும்.ராதா கல்யாணம் தண்டந்தோட்டம், உடையாளூர் ,மருதநல்லூர், தேப்பேருமாநல்லுர்,
கோனேரிராஐபுரம், நன்னிலம் ,வாழ்குடி, தூத்துகுடி ( நன்னிலம் அருகில்),ஆனதாண்டவபுரம் குண்ணம்,களப்பாழ்
போன்ற ஊர்களில் நடக்கும்.
அப்பொழுதெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் வைத்துக் கொண்டுதான் ராதா கல்யாணம் நடந்தது. மைக்செட்டு கூட வெகு நாட்களுக்கு பிறகு தான் ஏற்பாடு செய்யப்பட்டது .ஸ்ரீ வாஞ்சியம் ராமச்சந்திர பாகவதர் வந்தது முதல் மைக் செட் வசதி வந்தது.
----
விளங்குடி ஸ்ரீ ராமநாத பாகவதர் ,விளங்குடி கல்யாணசுந்தர பாகவதர், மற்றும் விளங்குடி விஸ்வநாத பாகவதர்.
---